(ஜூன் 25, 1975 ஆம் ஆண்டு இந்தியாவில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசர நிலை 1977ஆம் ஆண்டு நீக்கப்பட்டது. தற்போது 43 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், அவசர நிலை காலத்தில் நேர்ந்த நிகழ்வுகள், அதனால் ஏற்பட்ட தாக்கங்கள் குறித்து குடியரசுத் துணை தலைவர் எம். வெங்கைய நாயுடு எழுதிய கட்டுரை)
1976ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஜபல்பூர் கூடுதல் ஆட்சியர் எதிர் ஷிவ்காந்த் சுக்லா வழக்கு மிகவும் புகழ்பெற்றது.
ஹேபியஸ் கார்பஸ் வழக்கு என்றே இது அதிகம் அறியப்படுகிறது. அப்போது அரசு வழக்கறிஞராக இருந்த நிரேன் தே, உச்ச நீதிமன்றத்தில் முக்கியமான தகவலை கூறினார். ஒரு நபர் தனிப்பட்ட விரோதத்தால் போலிஸ் அதிகாரியால் கொல்லப்படும்போது அந்த நபரின் தரப்பு நீதிமன்றத்தில் மூலம் நிவாரணம் பெற முடியாது என அவர் கூறினார்.
நிரேன் தே உச்சநீதிமன்றத்திடம் தெரிவித்த தகவல் அரசின் அதிகாரபூர்வ கருத்து என்பது சொல்லாமலே விளங்கும்.
இந்த கருத்தை கேட்டு நீதிமன்றமே திகைத்து நின்றது. இந்த கருத்துக்கு நீதிபதி ஹெச்.ஆர்.கன்னா மட்டுமே முரண்பட்டார். மற்ற நான்கு கற்றறிந்த நீதிபதிகளும் கட்டப்பட்ட நாக்குகளுடன் அமர்ந்திருக்க அரசின் நிலைப்பாடு வென்றது. இவை நடந்தது சுதந்தர இந்தியாவின் இருண்ட காலமாக கருதப்படும் அவசர நிலை காலத்தில்...
குடிமகனுக்கு சட்டம் வழங்கிய அடிப்படை உரிமையை நிலைநாட்ட தீர்ப்பளித்த நீதிபதி ஹெச்.ஆர்.கன்னாவை பின்னுக்கு தள்ளிவிட்டு அவ்வழக்கில் வளைந்து கொடுத்து நடந்துகொண்ட ஹெ.எம்.பெக் பின்னர் நாட்டின் தலைமை நீதிபதியானார்.
அந்த சமயங்களில் உச்சநீதிமன்றம் மிகவும் கீழான நிலையை எட்டியிருந்தது. நாட்டில் நீதியின் ஆட்சி இருண்டிருந்த அந்நேரத்தில் மக்களின் பக்கம் நிற்கும் அரிய வாய்ப்பை ஜனநாயகத்தின் நான்காம் தூண் என அழைக்கப்படும் ஊடகங்கள் தவறவிட்டுவிட்டன. அச்சமயத்தின் அரசின் கட்டளைகளுக்கு ஊடகங்கள் பணிந்தன.
ராம்நாத் கோயங்காவின் இந்தியன் எக்ஸ்பிரஸ், தி ஸ்டேட்ஸ்மென் மற்றும் மெய்ன் ஸ்ட்ரீம் போன்ற சில பத்திரிகைகள் மட்டும் இதற்கு விதிவிலக்கு. வளைந்து செல்லக் கூறினால் ஊர்ந்தே சென்றார்கள் என அப்போதைய ஊடகத்தினரின் செயலை பளிச்சென வெளிச்சம் போட்டுக்காட்டினார் எல்.கே.அத்வானி.
அந்த இரண்டு ஆண்டு அவசர நிலைகாலத்தில் ஆட்சியில் இருப்பவர் சொல்வதே எல்லாம் என்ற நிலை இருந்தது. ஆள்வோருக்கு சாதகமாக அரசியல் சட்டமே திருத்தப்பட்டது. அப்போது நீதிமன்றங்கள் எதுவும் செய்ய முடியாத நிலை. இதனால் சட்டம் என்ற பெயரில் அரசு எதை வேண்டுமானாலும் செய்தது. மக்களின் வாழ்க்கையில், அவர்கள் சுதந்தரத்தில் கூட அரசு தலையிட்டது. அதிகரிக்கும் லஞ்ச ஊழல், அரசின் தோல்விகள் போன்றவற்றால் மக்கள் கொந்தளித்த நிலையில் அவசர நிலை என்ற பெயரில் அவற்றை அரசு சமாளித்தது.
ஒரு காவல் துறை அதிகாரி தனிப்பட்ட விரோதத்தால் ஒருவரை சுட்டுக்கொன்ற நிலையில் அதை ஆதரித்த அரசின் வாதத்தை ஏற்று உச்ச நீதிமன்றம் மவுனம் காத்தது. மக்களின் குரலாக திகழ வேண்டிய ஊடகங்கள் அரசின் செய்தி தணிக்கை முறைக்கு பணிந்ததன. மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டது, அரசியல் சட்டம் அரசின் கைகளில் சிக்கி அவதிப்பட்டது.
அவசர நிலை என்ற பெயரில் இத்தனை அலங்கோலங்கள் அரங்கேறின.
அந்த இருண்ட நாட்களில் இருந்து பல முக்கியமான பாடங்களை நாம் கற்க வேண்டியுள்ளது.
உணவு இருந்தால் மட்டும் சாமானிய மனிதனால் நிம்மதியாக வாழ்ந்துவிட முடியாது என்பதுதான் அந்த பாடம். 1977 மக்களவை தேர்தலின் போது ஆட்சியாளர்களுக்கு எதிராக ஒன்று திரண்டு மக்கள் அளித்த வாக்குகளே இந்த உண்மையை உணர்த்துகின்றன.
அவசர நிலை என்ற அந்த தவறு ஆரம்பித்த தினம் 1975, ஜூன் 25. இது 1977, மார்ச் 21ல் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதன் பிறகு சில மாதங்களில் நடந்த தேர்தலில் வாக்கு என்ற பெயரில் தங்கள் வலிமையை மக்கள் காட்டினர். அவசர நிலை இருந்த அந்த 21 மாதங்களும் இந்தியாவின் உண்மையான இருண்ட காலம் என்றால் அது மிகையல்ல. மேலும் அது மறக்க இயலாத ஒரு அனுபவமும் கூட.
அந்த அச்சுறுத்தல் மிகுந்த காலத்தின் நினைவுகளை நாம் அவ்வப்போது நினைவு கூற வேண்டியுள்ளது.
நமது வாழ்க்கைக்கு உணவு மட்டுமே போதுமானதல்ல.. அதையும் தாண்டி சில உரிமைகள் தேவையாக உள்ளது. அந்த உரிமைகள் இல்லாத வாழ்க்கை நிச்சயம் சுவையற்றது. அவசர நிலை காலத்தின் திகில் நிறைந்த நினைவுகளுடன் நான் பயணிக்கிறேன்.
மூத்த தலைவர்களுக்கு உதவிய பின் நிலவறைக்கு திரும்பி 2 மாதங்களுக்கு அங்கேயே இருந்தேன். பல்கலைக்கழக மாணவனான நான் பின்னர் 17 மாதங்களுக்கு மேல் சிறையில் அடைபட்டிருக்க நேர்ந்தது. அந்த சிறைவாசமே எனது வாழ்க்கையின் திருப்பு முனையாக அமைந்தது. அப்போது என்னுடன் இருந்த தலைவர்களும் சக கைதிகளும் அரசியல், அதிகாரம், மக்கள், தேசம் என பலவற்றை பற்றி எனக்கு தெளிவாக உணர்த்தினர். ஜனநாயகம் காக்கப்பட வேண்டும், மக்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்ற மன உறுதியை அது என் மனதில் ஏற்படுத்தியது.
1977க்கு பிறகு பிறந்தவர்களே இன்று இந்நாட்டில் அதிகப்படியாக உள்ளனர். இந்த நாடே அவர்களை நம்பி உள்ளது. அவர்கள் நாட்டின் வரலாறை அறிந்திருப்பது அவசியம். குறிப்பாக அவசர நிலை பற்றி அறிந்திருப்பது மிகவும் அவசியம். அவசர நிலை என்ற பெயரில் மக்களின் அடிப்படை உரிமைகளை பறித்ததை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. அவசர நிலை அமலாக்கத்திற்கு உள்நாட்டு பிரச்னைகளால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து என்ற போலியான காரணமும் அரசால் கூறப்பட்டது.
லஞ்ச ஊழலுக்கு எதிரான மக்களின் எழுச்சியும் புதிய இந்தியாவை தேடும் அவர்களின் வேட்கையுமே அரசை அவசர நிலை என்ற முடிவுக்கு தள்ளியது. எம்.பி ஆக பிரதமர் இந்திரா காந்தி வென்றது செல்லாது என்ற அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பும் இதற்கு மற்றுமொரு காரணமாக அமைந்தது. பிரதமரின் வெற்றி செல்லாது என கூற ஒரு நீதிபதிக்கு எவ்வளவு துணிச்சல் இருக்க வேண்டும்.
இந்த சமயத்தில்தான் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பறித்து பதில் தரப்பட்டது. அவசர நிலை காலத்தில் தேசமே ஒரு பெரிய சிறை போன்று காட்சியளித்தது. வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் எழுப்பப்பட்டு வலுக்கட்டாயமாக அருகிலுள்ள சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
ஜெயப்பிரகாஷ் நாராயண், அடல் பிஹாரி வாஜ்பாய், லால் கிருஷ்ண அத்வானி, ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், சரண் சிங், மொரார்ஜி தேசாய், நானாஜி தேஷ்முக், மது தண்டவதே, ராமகிருஷ்ண ஹெக்டே, சிக்கந்தர் பக்த், ஹெச்.டி.தேவே கவுடா, அருண் ஜெட்லி, ரவி சங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர், ராம்விலாஸ் பஸ்வான், டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி, லாலு பிரசாத் யாதவ், நிதிஷ் குமார் போன்ற தலைவர்களால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து எனக் கூறி அவர்கள் சிறையில் தள்ளப்பட்டனர்.
ஆர்எஸ்எஸ் தலைவர் பாளா சாஹெப் தேவ்ரஸ் உள்ளிட்ட 3 லட்சம் பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவசர நிலைக்கு எதிராக ஆள் திரட்ட நிலவறையில் மறைந்து கொண்டிருந்தார் நரேந்திர மோடி.
இருண்டு கிடந்த அவசரநிலையின்போது தேசத்தினுடைய ஜனநாயகத்தின் மனசாட்சி உலுக்கப்பட்டது.
அது போன்ற ஒரு அவலம் இனியும் நேரக்கூடாது என தேசம் உறுதியேற்க வேண்டும்.
அவசர நிலை காரணத்தை ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூறும் போது மட்டுமே அந்த அவலத்தை தவிர்க்கும் உத்வேகம் மனதில் உறுதிபட இருக்கும். சுதந்தர இந்தியாவின் இருண்ட காலங்களை இளம் தலைமுறையினர் அறிவது அவசியம்.
"உண்மையும் அன்பும் எப்போதும் வெல்ல வேண்டுமென்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இதற்கு எதிராக சிலர் இருந்தாலும் உண்மையும் அன்புமே இறுதியில் வெல்லும்" என கூறினார் தேசத்தந்தை மகாத்மா காந்தி.
அறிந்துகொள்வோம் !தகவல் அறியும் உரிமைச் சட்டம்
அந்த இருண்ட நினைவுகளையே ஒளிமிகுந்த எதிர்காலத்துக்கான வழிகாட்டியாக கொண்டு நாம் பயணிப்போம்.
BBC tamil
0 Comments