நமது தாய்மொழி தமிழ். இது நமது மாநில அரசின் ஆட்சிமொழியும் ஆகும்.
நமது பாரத நாட்டின் ஆட்சிமொழி இந்தி என அறிவிக்கப்பட்டு பாரத அரசின் அலுவல்கள் அம்மொழியில் நடைபெறுகின்றன.
மேலும் இந்தியாவில் பெரும்பாலோர் இந்தியைப் புரிந்து கொள்வதால் இந்திய அரசின் ஆட்சிமொழி என்பது மட்டுமின்றி பெரும்பாலான வட இந்திய மக்களின் பேசும் மொழியாகவும் அது விளங்குகிறது.
இதுவரையில் நம்மை ஆங்கிலேயர் ஆண்டு வந்ததால் நாம் ஆங்கிலம் கற்று வந்தோம். நாடு விடுதலை பெற்ற பிறகும் நாம் அம்மொழியை உலகத் தொடர்புகளுக்காகக் கற்கிறோம்.
அதுபோல இப்போது தேசிய மொழியான இந்தியைக் கற்பது அவசியம் எனப் பலர் உணரலாயினர். அதற்கு தமிழ் மக்கள் தமிழ் மூலம் இந்தியைக் கற்க ஒரு புத்தகம் தேவையல்லவா!அதற்காகத் தமிழ் மக்களுக்கு உதவும் வண்ணம் “தமிழ் மூலம் இந்தி கற்போம் “ என்ற அடிப்படையில் இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது.