நூல்கள்

6/நூல்கள்/ticker-posts

Ad Code

அறிவியல் சிந்தனைத் தூண்டல் முறை


அறிவியல் சிந்தனைத் தூண்டல் முறை





அறிமுகம்
சர் ஐசக் நியூட்டனின் புவி ஈர்ப்பு தத்துவமும், தாமஸ் ஆல்வா எடிசனின் மின்சாரக் கண்டுபிடிப்பும், ரைட் சகோதரர்களின் ஆகாய விமான இயக்கமும், இது போன்ற எண்ணற்ற கண்டுபிடிப்புகளும் எவ்வாறு உருவாகின?

மேற்கண்ட அறிவியல் உண்மைகளை பரிசோதனை மூலம் கண்டறிந்த அறிவியலாளர்களின் சிந்தனைத் தூண்டல்கள்தான் என்பது நாம் அறிந்ததே.

நவீனக் காலத்தில் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தக் கூடிய பொருள்களின் கண்டுபிடிப்புகளுக்கும் காரணமாக அமைவது அறிவியல் சிந்தனைத் திறனே ஆகும். மனிதனின் சிந்தனைப் பெருக பெருக இயற்கை வளங்களை மனிதனுக்கு தேவையான அடிப்படைப் பொருளாக மாற்றுவதற்குரிய வழிமுறைகளும், அறிவியல் சிந்தனைகளால் உருவாக்கப்படுகின்றன. இன்றைய தகவல் தொழில் நுட்பம், கணினி மற்றும் இணையம் உலகின் எந்த பகுதியிலும் உள்ள தகவல்களை அறியக் கூடிய வாய்ப்பு, இயற்கை வளங்களின் இருப்பு உட்பட அனைத்து வித தகவல்களையும், எந்தவொரு மனிதனும் அறிந்துக் கொள்ளும் வாய்ப்பை அறிவியல் சிந்தனைகளே நமக்குத் தருகின்றன. ஆகவேதான் இயற்கையின் எல்லா வளங்களைக் காட்டிலும் மனித வளம் என்றழைக்கப்படும் மனிதனின் அறிவியல் சிந்தனை வளமே தலையாயதாகக் கருதப்படுகிறது

அறிவியல் சிந்தனைத் தூண்டல் முறை - வரையறை
"அறிவியல் சிந்தனைத் தூண்டல் முறை (Scientific Inquiry Method) என்பது உலகின் இயற்கை மற்றும் சமூக, கலாச்சார நிகழ்வுகளைப் பற்றிய புதிய தகவல்களை வினாக்களின் மூலம் கண்டறியும் கற்றல் அணுகுமுறை ஆகும்” என்று நீல்போஸ்ட்மேன் மற்றும் வெங்யங்காட்னர் ஆகியோர் வரையறுக்கின்றனர்.

இன்றைய மாணாக்கர்கள், அறிவியல் சிந்தனைத் திறனை தமது வகுப்பறை சூழலிருந்து பெருக்கிக் கொண்டே செல்கிறார்கள். இது போல சமூக அறிவியல் கற்கும் போதும் அப்பாடக் கருத்துக்களை அறிவியல் பெருக்கத்துடன் தமது வாழ்க்கையையும், வளமையுடன், சிந்தனையுடன் கற்றுக் கொள்வது அவசியம். அவ்விதம் செயல்படுவார்களேயானால் வாழக் கற்றுக் கொள்வது இயலும். எனவே, சமூக அறிவியல் பாடத்தை கற்பிக்கும் போது அறிவியல் சிந்தனை திறன்களையும் மாணவர்களிடம் வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் அறிவியல் சிந்தனைத் தூண்டல் முறை என்ற கற்பிக்கும் முறையை வளநூலில் இடம் பெற செய்யப்பட்டுள்ளது.

கற்போரை மையமாகக் கொண்ட அறிவியல் சிந்தனைத் தூண்டல் முறை, வினாக்கள் தொகுத்தல் முறையை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. அறிவியல் சிந்தனைத் தூண்டல் முறையின் வழியாக மாணவர்கள் அர்த்தமுள்ள வினாக்களை கேட்க ஊக்குவிக்கப்படுகின்றனர். ஆசிரியர்கள் முடிந்தவரை மாணாக்கர்களின் வினாக்கட்கு நேரிடையான பதில்களை அளிப்பதை தவிர்த்து வினாக்களின் மூலமாகவே படிப்படியாக மாணவர்களின் சிந்தனையைத் தூண்டும் வகையில் வினவ வேண்டும். இக்கற்பித்தல் முறை முற்காலத்தில் சாக்ரடீஸ் என்ற தத்துவஞானி முதல் இக்கால கல்வியாளர்கள் வரை கையாளப்படும் முறையாக உள்ளது. ஏன்? எதற்கு? எப்படி? என்ற வினாக்களே அனைத்து வித தகவல்களையும் அறிவதற்கு தூண்டுகோள்களாக அமைகின்றன. இம்முறை அறிவியல் பாடக் கருத்துக்களை கற்பிப்பதற்கு மட்டுமல்லாமல் சமூக அறிவியல் பாடத்தைக் கற்பிப்பதற்கும் பயன்படுத்தப்பட வேண்டிய முறையாகும். சமூக அறிவியல் மனிதன் மற்றும் இயற்கை பற்றிய கருத்துக்களை உள்ளடக்கியது மட்டுமல்லாமல், மனிதனுக்கும் மனிதனுக்கும், மனிதனுக்கும் சமூகத்திற்கும், மனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்பினை விளக்கும் பாடமாக விளங்குகிறது. சமுதாயத்தில் நடைபெறும் நிகழ்வுகளுக்கும், பிரச்சினைகளுக்கும், சிந்தனைகளின் மூலம் தீர்வு காணுதல் அவசியமாகிறது. அறிவியல் துறையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் நிலையான தீர்வுகளை அளிக்கவல்லது.

அறிவியல் சிந்தனை தூண்டல் முறையின் சிறப்பம்சங்கள்
வினாக்களின் மூலம் கண்டறியும் இக்கற்றல் அணுகுமுறை, கற்போரை மையமாகக் கொண்டது. ஆதலால் மாணாக்கர்கள் தாங்களாகவே கற்றலில் ஈடுபடும் மனப்பாங்கு ஏற்படுகிறது.
மாணவர்கள் ஆராய்ச்சி மனப்பான்மையுடன் செயல்படுவதால் பாடக்கருத்துக்களால் முழுமையாக கவனம் செலுத்த முடிகிறது.
பொருத்தமான செயல்முறை ஆராய்ச்சியில் ஈடுபடும் பொழுது மாணவர்களிடையே புலன்உணர்வு வெளிப்படுகிறது.
மாணவர்கள் தங்களிடையே கருத்துக்களை தெரிவிப்பதில் வளைந்து கொடுக்கும் தன்மையும் பரந்த மனப்பான்மையும் உருவாகிறது.
பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதன் மூலம் தன்னம்பிக்கை மற்றும் துணிவு போன்ற பண்புகளை உருவாக்குகிறது.
மாணவர்களிடையே நேரடியான கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்வதால் திறந்த மனதுடன் (Open minded) தமது கருத்துக்களை வெளிப்படுத்தும் திறன் ஏற்படுகிறது. இது ஒரு அறிவியல் அணுகுமுறை என்பதால் தொடர்ந்து படிப்படியாக கருத்துக்களை சேகரிக்கும் திறனும் கூடுகிறது.
ஜான் டூயி - யின் கூற்றுப்படி இது ஒரு பன்முனை கற்றல் அணுகுமுறை. இந்த அணுகுமுறையால் எதையும் அறிந்து கொள்ளவேண்டும் என்ற குழந்தைகளின் உள்ளார்ந்த ஆர்வமும், கருத்துப்பரிமாற்றமும், பாடக் கருத்தாக்கமும் மற்றும் கலையுணர்வு வெளிப்பாடு போன்ற நான்கு பண்புகளையும் வளர்க்கும் சிறப்பு அம்சத்தினைக் கொண்டது.
மாணவர்கள் தாங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடக் கருத்துக்களை தமக்கு ஏற்கனவே தெரிந்த கருத்துக்களில் இருந்து படிப்படியாக அறிந்து கொள்ள இம்முறை வாய்ப்பளிக்கிறது.
இம்முறை குழந்தைகளின் படைப்பாற்றலுக்கு வழி வகுக்கிறது. (உ.ம்) புதிய கோணத்தில் கருத்துப்படம் வரைதல், புதுமையான பொருட்களை உருவாக்குதல்.
அறிவியல் சிந்தனைத்துண்டல் முறை - படிநிலைகள்
இம்முறையை வகுப்பறை கற்றல் கற்பித்தலில் பயன்படுத்தும் பொழுது கீழ்க்கண்ட படிநிலைகளைப் பின்பற்றி செயல்படுத்துதல் முறையான பயனை தரும்.

படிநிலைகளின் விளக்கங்களாவன.

பிரச்சனையை கண்டறிதல்
மாணவர்கள் தன் சுற்றுப்புறத்தில் நிகழும் இயற்கை பிரச்சினைகளையோ, பாடக்கருத்துக்கள் சார்ந்த ஆய்வு தலைப்புகளையோ, தன் அன்றாட வாழ்க்கையில் காணும் சமூக கலாச்சார பிரச்சினைகளோ அறிவியல் சிந்தனைத் தூண்டல் முறைக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய பிரச்சினைகளாக அமையலாம். மாணவர்களின் சிந்தனையைத் தூண்டுவதற்கு பிரச்சினைக்குரிய தலைப்புகளை தேர்ந்தெடுத்தல் முதல் படிநிலையாகும். ஆசிரியர்கள் பிரச்சினைகளைத் தேர்ந்தெடுக்கும் நிலையில் தக்கதொரு வழிகாட்டியாக செயல்படுதல் அவசியம். ஏனெனில் பிரச்சினைகள் மாணவர்கள் உற்று நோக்கத்தக்கதாகவும், தேர்ந்தெடுத்த பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு தம் அன்றாட வாழ்வில் கையாளத்தக்கதாகவும் தேர்ந்தெடுத்தல் வேண்டும்.

உதாரணமாக,

பள்ளிக்கு அருகாமையில் உள்ள ஆறு மற்றும் குளங்களில் நீர் மாசுபடுதல்.
தம் சுற்றுப்புறத்தில் ஒலி மாசுபடுதல்.
பயனற்ற பொருட்களை குவித்தல்
பிரச்சினைகளை உற்றுநோக்குதலும், விவரித்தலும்
அறிவியல் சிந்தனைத் தூண்டல் இரண்டாவது படிநிலையாக அமைவது தேர்ந்தெடுத்த பிரச்சினையை உற்றுநோக்குதலும் விவாதித்தலும் ஆகும். பிரச்சினையை தேர்ந்தெடுத்த பிறகு பிரச்சினையின் தோற்றத்தையும், மூலகாரணத்தையும், ஆழத்தையும் அறிய உற்று நோக்கல் அவசியமாகிறது. எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வுகாண பிரச்சினையை சில காலத்திற்காவது உற்றுநோக்கல் அவசியமாகிறது. உற்றுநோக்கும் போதெல்லாம் பிரச்சினைக்கான காரணங்களை வகைப்படுத்த வேண்டும். பின் பட்டியலிட்டவற்றை தொகுத்து காரணங்களை பட்டியலிடுதல் வேண்டும். இதனால் பிரச்சினைக்கான தீர்வுகளை அதன் வகைக்கேற்ப கண்டறிய இயலும். உதாரணமாக,

தாம் வாழும் இடத்திலோ அல்லது தமது சுற்றுப்புறத்திலோ பயனற்ற பொருள்களை குவித்தலால் ஏற்படும் தீமைகளை உணர்ந்து அதனை பிரச்சினையாக தேர்ந்தெடுத்தால், யாரால், எந்தவிதமான பொருள்கள் குவிக்கப்படுகின்றன என்பதையும், எவ்வளவு காலமாக குவிக்கப்படுகின்றன என்பதையும், அதனால் ஏற்படும் இடவசதியின்மை, கழிவுப்பொருட்களுக்குள் ஏற்படும் வேதி வினை மாற்றங்கள், இவ்வினை மாற்றங்களால் ஏற்படும் கார்பனின் அடர்த்தி, கார்பனின் அதிகரிப்பால் நாம் சுவாசிக்கும் மாசுபட்ட காற்று இதனால் விளையும் சுகாதார கேடுகள் போன்ற விளைவுகளை பற்றி விவரித்துக் கொள்ளுதல் அவசியம்.

வினாக்கள் தயாரித்தல்
அறிவியல் சிந்தனைத்துாண்டல் முறையில் மூன்றாவது படிநிலையாக அமைவது வினாக்கள் தயாரித்தல் ஆகும். மாணவர்களின் சிந்தனையைத் தூண்டும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரச்சினைக்குரிய அறிவுப்பூர்வமான வினாக்களை தயாரிக்க வேண்டும். நாம் எடுத்துக் கொண்ட பிரச்சினைக்குரிய கீழ்க்கண்ட வினாப்பட்டியலை தயாரிக்கலாம்.

கழிவுப் பொருட்களை உரிய இடத்தில் போடுவதன் அவசியம் என்ன?
கழிவுப் பொருட்களை மட்கும் குப்பை, மட்காத குப்பை என்று ஏன் பிரிக்க வேண்டும்?
குவிக்கப்பட்ட கழிவுப்பொருட்களால் பரவக்கூடிய நோய்கள் யாவை ?
நோய்கள் பரவுவதால் சமுதாயச் சீர்கேடு எவ்வாறு ஏற்படுகிறது ?
சமுதாயச் சீர்கேட்டினால் விளையக்கூடிய பொருளாதார விளைவுகள் யாவை ?
கழிவுப் பொருட்களை எவ்வாறு மேலாண்மை (Management) செய்வது? இது போன்ற வினாக்களை தொடுத்தால் பிரச்சினைக்குரிய தீர்வை நோக்கி மாணவர்கள் சிந்திக்க வாய்ப்பு ஏற்படும்.
வினாக்களுக்குகந்த விடைகளை புலனாய்வு செய்தல்
பட்டியலிட்ட வினாக்களுக்கு பொருத்தமான விடைகளை தேர்ந்தெடுத்து விளக்கமளித்தல் அறிவியல் சிந்தனைத்தூண்டல் முறையின் நான்காவது படிநிலையாகும்

வினாக்களுக்கு உரிய விடைகளை தேர்ந்தெடுக்கப்பட்ட பிரச்சினையின் அடிப்படையில் ஆராய்ந்து தேவையான புள்ளி விவரங்களை சேகரித்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு எடுத்துக் கொண்ட வினாக்களுக்கு பொருத்தமான விடைகளை அளிக்கலாம்.

சுகாதாரம் பேணுதல்.
சில பொருட்கள் மட்கும் தன்மை வாய்ந்தது. சில பொருட்கள் மட்காத தன்மை கொண்டவை. இரண்டு பொருட்களும் கலந்து விடும் பொழுது நச்சுத் தன்மை கொண்டவையாக மாறிவிடுகின்றன. இது போன்று வினாக்களுக்கு விடை தேடுதல் வேண்டும்.
பகுப்பாய்தல்

பிரச்சினைக்குரிய காரணங்களை விடைகளின் மூலம் வகைப்படுத்திய பின் ஒவ்வொரு வகைக்கான தீர்வுகளை ஆய்ந்தரிதல் வேண்டும். உதாரணமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரச்சினைக்கு மட்கும் கழிவுப் பொருள், மட்காத கழிவுப் பொருள் என பிரித்து ஆய்ந்தறிதல் மூலம் பொருட்கள் மேலாண்மை திறனை மாணவர்கள் தெரிந்து கொள்ள முடியும்.

தீர்வைப் பகிர்தல்

பிரச்சினையை பகுப்பாய்வு செய்தவுடன் தனியாகவோ அல்லது குழுவின் மூலமாகவோ பிரச்சினைக்குரிய தீர்வுகளை பகிர்ந்து கொள்ளும் திறனை பெறவேண்டும். உதாரணமாக கழிவுப்பொருட்களால் ஏற்படும் சுற்றுப்புற சீர்கேடுகளையும், அவற்றை மேலாண்மை செய்யும் வழிமுறைகளையும் பற்றிய விழிப்புணர்வினை சமுதாயத்தினரிடையே ஏற்படுத்த வேண்டும்.

தொகுத்தல்

பிரச்சினையை கண்டறிந்து, உற்றுநோக்கி, விவரித்து, வினாக்களை தொகுத்து, விடைகளை புலனாய்வு செய்து, கண்டறிந்த தீர்வுகளை தொகுத்து பதிவு செய்தல் வேண்டும். பதிவு செய்த விவரங்களை அறிக்கையாக தயாரித்து வைத்தல் வேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது மாணவர்களுக்கு அவர்கள் எதிர்கொள்ளும் மற்ற பிரச்சினைகளுக்கும் அறிவியல் சிந்தனையை தூண்டும் முறையில் செயல்பட வழிவகுக்கும். உதாரணமாக கழிவுப்பொருட்கள் மேலாண்மையில், மாணவர்கள் கண்டறிந்த பிரச்சினை முதற்கொண்டு, அதற்கான தீர்வுகளை கண்டறிதல், வரையும் தொகுத்து அறிக்கையாக சமர்ப்பித்து அறிவியல் சிந்தனைத் தூண்டல் திறனை மாணவர்களிடையே தூண்டல் வேண்டும்.

அறிவியல் சிந்தனையைத் தூண்டல் முறையில் ஆசிரியரின் பங்கு
கற்றலில் மாணவர்களுக்குச் சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தவும், மாணவர்களை ஊக்குவிக்கவும் இம்முறை மிகவும் பயன்படுகிறது. இதில் ஆசிரியர்,

ஆர்வமூட்டுபவராகவும் கருத்து அளிப்பராகவும் இருத்தல் அவசியம்.
கற்றலுக்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கித் தருபவராக இருத்தல் வேண்டும்.
பின்னணியில் இருந்து கொண்டு தேவையான பொருட்களையும், வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பவராக ஆசிரியர் இருக்க வேண்டும்.
ஆசிரியர்கள் சிந்தனையைத் தூண்டுபவராக மட்டுமல்லாமல், மாணவர்கள் தானாகக் கற்பவராக மாறும் நிலைவரை உதவிபுரிய வேண்டும்.
மாணவர்கள் பிரச்சனைக்கு கண்டறிந்த தீர்வை வாழ்வில் பின்பற்ற வலியுறுத்தல்.
கீழ்க்கண்ட தலைப்புகளில் அறிவியல் சிந்தனைத் தூண்டல் முறையை மாணவர்களிடையே நடைமுறைப்படுத்தலாம்.

மத நல்லினக்கம் - மாணவர்களின் பங்களிப்பு.
பண்டைய எழுத்து முறைகளை நடைமுறைப்படுத்த இயலாமை.
‘உலக வெப்பமயமாதல்’ மட்டுப்படுத்த மாணவனின் பங்கு.
வளங்களின் பேணத்தகு முன்னேற்றம்.

முடிவுரை
எனவே, இம்முறை கற்றலில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தை வகுக்கின்றது. மாணவர்களின் சிந்தனையையும், ஆய்வு மனப்பான்மையையும் தூண்டுவதுடன், படைப்பாற்றலையும் வளர்க்கிறது. மாணவர்கள் மையக் கற்றலாக அமைவதுடன் நிலையான கற்றலுக்கும் வழிவகுக்கின்றது. இம்முறையில் ஆசிரியர் மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கிறார் என்பதில் ஐயமில்லை.