வாசிப்பு மட்டுமே ஒரு மனிதனின் கல்வியறிவை முழுமைப்படுத்தும்! எவ்வாறு ?



அறிமுகம்

கா(caps)கிதத்தைக் கண்டுபிடித்த சீனர்களின் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி காகிதத்தை விரிவுபடுத்திப் பரப்பியதன் ஊடே வாசிப்புக்கான முதன்மைச் சாதனமான புத்தகங்களை ஒரு வளர்ச்சியடைந்த நிலைக்குக் கொண்டு வந்தார்கள்

குறிப்பிட்ட பாடத்திட்டத்தை முடிப்பதன் மூலம் சான்றிதழ்களைப் பெரும் கல்வி குறுகிய வட்டம் கொண்டது. அது ஆய்வாழம் கொண்டதாகவும், விரிந்த தன்மை கொண்டதாகவும் அமையும் சந்தர்ப்பம் குறைவு. அதிகமாக இக்கல்வி ஒரு தகவல்கள் திரட்டு விஷயதானங்களின் சேகரிப்பு.கல்வி நிறுவனமொன்றில் படிக்காதவனும், அல்லது சிறியதொரு தரத்தோடு அக் கல்வி நிறுவனத்தை விட்டு வெளியேறியவனும் வாசிப்பால் உயர்கிறான்; அறிஞனாகிறான்; அறிவு ஜீவியாகிறான்.

வாசிப்பே கல்வியை முழுமைப் படுத்துகிறது; ஆழமாக்குகிறது; விரிவுபடுத்துகிறது. அது பல்வேறு சிந்தனைத் தளங்களைக் காட்டும் நாடுகளையும், சமூகங்களையும் அறிய உதவும்.

வாசிப்பு விரிவாக விரிவாக தன்னைச் சுற்றியுள்ள பிரபஞ்சத்தை மனிதன் புரிந்து கொள்கிறான். தன்னையும் புரிந்துகொள்கிறான். தன்னைச் சுற்றியுள்ள உலகைப் புரிந்து கொள்ளாதிருப்பதும், தன்னைப் பற்றியே அறியாதிருப்பதுவும் எவ்வளவு பெரும் துரதிஷ்டம்

வாசிப்பு இல்லாதவன் எப்படி மனிதனாக முடியும்?

தன்னைச் சுற்றியுள்ள உலகையோ, தன்னைப் பற்றியோ அவனுக்குத் தெரியாது. அர்த்த பூர்வ வாழ்வு அறிவோடுதான் ஆரம்பமாக முடியும். அறிவற்றவன் ஒரு மிருகம். உண்ணவும், குடிக்கவும், பிள்ளைகள் பெற்று வாழவுமே இவ்வுலகோடு அவன் தொடர்பு கொள்கிறான். அவ்வளவே அவனுக்கு இவ்வுலகு பற்றித் தெரியும். இது என்ன இழிந்த வாழ்வு

கல்வி நிறுவனமொன்றில் படித்து வெளியேறியதும் வாசிப்பதன் ஊடே அறிவு தேடாது, அறிவு வாழ்வைத் துறந்து, பெற்ற சான்றிதழால் உழைக்க மட்டும் தெரிந்தவன் ஒரு பொருளாதார பிராணி மட்டுமே. வாசிப்பு ஒரு பழக்கமாக வேண்டும். வாசிக்காத ஒரு நாள் வாழ்வில் இருந்து விடக் கூடாது. இப்படி அறிவில் எப்போதும் உயர்ந்து கொண்டே செல்ல வேண்டும். இதுவே வாசிப்பின் அடிப்படை உண்மை.

வாசிப்பு குறிப்பிட்ட துறை சார்ந்ததாகவோ, குறிப்பிட்ட சிந்தனை முகாம் சார்ந்ததாகவோ மட்டும் இருக்கக்கூடாது. இது பார்வையைக் குறுக்கும். குறிப்பிட்ட சிந்தனை முகாம் சார்ந்து இது அமைந்தால் குறிப்பிட்ட நபரை அது பிடிவாதக்காரனாகவும், வெறி உணர்வு கொண்டவனாகவும் ஆக்கும். இதுவே மூளைச் சலவை செய்ததாக அமைகிறது. துறையோ, முகாமோ சாராது, விரிந்து வாசிப்பவன் உண்மைகளை அவசரமாகப் புரிந்து கொள்கிறான். அவனது பார்வை விரிகிறது. விட்டுக் கொடுக்கும் மனப் பாங்கும், சகிப்புத் தன்மையும், அடுத்த கருத்துக்களை மதிக்கும் போக்கும் அவனிடம் உருவாகிறது. ஒரு பிரச்சினைக்கு ஒரு கோணமல்ல, பல கோணங்கள் உள்ளன என்றும், தீர்வு என்பது ஒரு தீர்வல்ல, பல தீர்வுகள் உள்ளன எனவும் அவன் புரிந்து கொள்கிறான். இந்த வகையில் கருத்து வேறுபாட்டின் வட்டமும் சுருங்குகிறது.

இந்த வகையில் வாசிப்பு என்பது ஒரு கற்றல்; அறிவு தேடல் செயற்பாடு என்றாகிறது. குறிப்பிட்ட துறையில் குறிப்பிட்ட பாடத்திட்டத்தை படிப்பது மட்டுமே கல்வி அல்ல. அது முழுமையான கல்வியுமல்ல. அது மிகச் சரியாக அமைந்தால் கற்றலுக்கு அது வழிகாட்டும்; நெறிப்படுத்தும். வாசிப்பைத் தொடரும் போதுதான் கற்றல் செயற்பாடு விரிகிறது, ஆழமாகிறது. இந்த வகையில் வாசிப்பை ஒரு கற்றல் தொழிற்பாடாகவே கொள்ள வேண்டும். வெறுமனே பொழுது போக்குக்கான ஒரு வழியல்ல அது.

வாசிப்பு மூன்று கூறுகள்

  •     தான் கற்ற துறையை விரிவுபடுத்தலுக்காகவும், அதில் ஆழ்ந்து செல்வதற்காகவும் வாசித்தல்.
  •     அறிவின் புதிய பரப்புகளை, அறிந்து கொள்ள வாசித்தல்.
  •     பொது வாசிப்பு.


இதில் முதலாவது வகை தன் துறை சார்ந்து கற்றலை விரிவு படுத்த வாசித்தல் என்பதற்கு ஆலோசனை பெருமளவு தேவை இல்லை. துறை சார்ந்தவரே அதனை நெறிப்படுத்திக் கொள்ள முடியும். எனினும் இங்கு ஓர் அடிப்படை உண்மை உள்ளது. அதனை மட்டும் குறிப்பிடுவோம். தனது குறிப்பிட்ட துறையின் முன் மாற்று சிந்தனைகளையும் வித்தியாசமான கருத்துக்களையும், பார்வைகளையும் கற்றலே இந்த வாசிப்பின் அடிப்படையாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட துறையை நான் படித்த கோணத்திற்கான விமர்சனங்கள் யாவை? அதன் மாற்றுப் பார்வை என்ன எனப் புரிந்துகொள்ள வேண்டும்.

இரண்டாவது வகையின் பொருள் எனது துறைக்கு வெளியே உள்ள அறிவுப் பகுதிகளை வாசித்தல் என்பதாகும். இதுவே உண்மைகளை முழுமையாகப் புரிந்து கொள்ளவும், பிரச்சினைகளை பல கோணங்களில் பார்க்கவும் உதவி செய்யும்.

மூன்றாவது பொதுவாசிப்பு என்பது துறைசார் கலைச் சொற்பிரயோகங்கள், வகைப் படுத்தல்களை விட்டு நீங்கிய நூல்களை வாசித்தலாகும். இத்தகைய நூல்கள், பொருளாதாரம், அரசியல், மருத்துவம் போன்ற துறைகள் பற்றிப் பேசும். ஆனால் அக்கலைகளில் பொது உண்மைகளையும் அவை சார் பிரச்சினைகளையும் பேசும். இவையே வாசிப்பின் அடிப்படையாகும். வாசிப்பை இங்கிருந்து துவங்கல் இலகு. வெறும் ஆரம்ப அறிவு பெற்றவர் கூட தன் கற்றல்களை இந்த வாசிப்பிலிருந்து துவங்கலாம்.

வாசிப்பு கல்விக்காக வெறும் பொழுது போக்குக்காக அல்ல என்ற அவதானம் மிக முக்கியமானது. இந் நிலையில்தான் அது அறிவு தேடலுக்கான அனைத்துப் பண்புகளையும் பெறும்.

அத்தோடு வாசகன் தன்னை ஒரு அறிவு ஜீவியாக வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற இலக்கையும் கொண்டிருக்க வேண்டும். கல்வி நிறுவனங்களில் தரப்படும் பாடத்திட்டங்களை மட்டும் படித்து அறிவு ஜீவியாக மாறல் மிகவும் அருமை. எனவேதான் பட்டங்கள் பலவற்றைப் பெற்றும் வெறும் தகவல்கள் சுமந்தவர்களாக இருக்கும் பலரை நாம் காண்கிறோம்.

அறிவுஜீவி என்பவன் விடயங்களை தர்க்க ரீதியாகப் பார்க்கத் தெரிந்தவன். அவன் ஒரு கண்டுபிடிப்பாளன். நிகழ்வுகள், இயக்கங்களிடையே காணப்படும் தொடர்புகளைக் கண்டு முடிவுகளுக்கு வரக்கூடியவன். ஆக்க சக்தி உள்ளவன். பல புதிய உண்மைகளையும், சிந்தனைகளையும் முன்வைப்பவன்.

அறிவு ஜீவியை ஒரு கல்வி ஸ்தாபனம் உருவாக்குவதில்லை. சில அடிப்படைகளை மட்டும் அது கொடுக்க முடியும். பரந்த ஆய்வடிப்படையிலான வாசிப்பே ஒரு அறிவு ஜீவியை உருவாக்கிறது.

இப்போது நாம் விளக்கியது வாசிப்பதன் உயர்ந்த நிலை. உயர் இலட்சியம். வாசிப்புக்கு அடுத்த தரங்கள் உள்ளன.

குறைந்தது வாசிப்பு பாமரத்தன்மையை இல்லாமலாக்க வேண்டும். விஷயங்களை மிகவும் மேலோட்டமாகப் பார்ப்பது,வெறும் வசன, சொற்கவர்ச்சிகளுக்கு உட்படுவது, குறிப்பிட்ட நபருக்கு வீர வணக்கம் செலுத்துவது – இவற்றையே பாமரத்தன்மை என்கிறோம்.விஷயங்களை அப்படி அப்படியே எடுத்து ஆழ்ந்து பார்க்கத் தெரியாமல் ஆட்டு மந்தைக் கூட்டம் போல் சத்தமிடும் எல்லோருக்கும் பின்னால் செல்லும் நிலைதான் சர்வாதிகாரத்தை உருவாக்கும் நிலை. சர்வதேச ஆதிக்க, சுரண்டல் சக்திகளுக்கு சாதகமான நிலை.

இந்நிலையை அகற்றப் பயன்படுவது சுதந்திர வாசிப்பே. இதற்கு மக்கள் திட்டமிட்டு நெறிப்படுத்தப் பட வேண்டும்.இங்கு நாம் மக்கள் என்று குறிப்பிடுவது பல்கலைக்கழகப் பட்டம் பெறாதவர்களை மட்டுமல்ல. பல்கலைக்கழகப் பட்டம் பெற்றவர்களிலும் பாமரர்கள் உள்ளனர். தமது பாடத்திட்டத்திற்கு வெளியில் எதுவும் தெரியாது, பட்டம் பெற்றதன் பின்னர் அறிவு தேடுவதை நிறுத்திக் கொண்டவர்கள் பலர் உள்ளனர்.

பாமரர்களையும் வாசிக்கப் பழக்க வேண்டும். பாமரத்தன்மையை நீக்கலே அதன் இலக்காகக் கொள்ளப்பட வேண்டும். அதற்கானதொரு செயற்திட்டம் தயாரிக்கப்பட்டு நடைமுறைப் படுத்தல் மிகவும் அவசியமானது. இது நடைபெறாத போது அறிவுஜீவிகள் ஒரு உலகத்திலும் பொதுமக்கள் வேறொரு உலகிலும் வாழ்வார்கள். அப்போது அறிவு ஜீவிகள் தனிமைப் பட்டுப் போவார்கள். அவர்களால் பெரியளவு எதுவும் சாதிக்க முடியாது போகும். ஆதிக்க சக்திகள் தமது கையில் வைத்துள்ள பாரிய ஊடக சக்தியால் உலகை எப்போதும் தம் கையில் வைத்திருப்பார்கள்.

இஸ்லாமியவாதிகளின் வாசிப்பென்பது மிகவும் அத்தியவசியமானது. வாசிப்பற்றவன் இருக்கத் தகுதியற்றவன். வாசிப்பு மூன்று வகையானது.

    கலைகள் சார் வாசிப்பு. இப்பகுதியில் பழைய அறிவுப் பாரம்பரியத்தை வாசிப்பது அவசியம் என்பது உண்மையானாலும் நவீன காலப்பிரிவில் இதில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும், ஆய்வுகளும் மிகப் பாரியன. அவற்றை வாசித்து ஆழ்ந்து படிக்காவிட்டால் நவீன உலகில் நின்று பேசவே அவன் தகுதியற்றவனாவான்.

    அரசியல், பொருளாதாரம், இலக்கியம் போன்ற நடைமுறை உலகைப் புரிந்து கொள்ளும் பொதுவாசிப்பும், இவை சார் நவீன  ஆய்வுகளும். இவைசார் விரிந்த ஆய்வு ரீதியான வாசிப்பே நவீன உலக சிந்தனைப் போராட்டதின் ஆயுதம். தனது தூதை எவ்வாறு சுமந்து செல்ல வேண்டும் என்ற அறிவையும் அப்போதுதான் பெற முடியும்.

    திட்டமிடல், நிர்வாகம், ஊடகத்துறைசார் வாசிப்புகள். இவ்வுலகில் மிகச்சிறந்த முறையில் இயங்கும் வாய்ப்பைக் கொடுக்கும்.

ஒரு சிறந்த உரிமை போராளியாகி, தனது சமூகத்திற்கும் உலகுக்கும் கொடுப்பவனாக இருக்க வேண்டுமானால் இப்படி தன்னை அவன் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !