இதைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
*இதைப் படித்து முடிக்கும் பொழுது நீங்கள் பின்வரும் பயன்களையும் திறன்களையும் பெறுவீர்கள்.
* சங்க இலக்கியத்தின் எட்டுத் தொகையுள் சிறந்த ஒரு நூலாகிய புறநானூறு பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
* சங்க காலத்தில் வாழ்ந்த மன்னர், புலவர், மக்கள் ஆகியோர்தம் உயர்ந்த பண்பாடுகள் பற்றிப் புரிந்து கொள்ளலாம்.
* மகளிரும் கல்வி, புலமை, வீரம் இவற்றில் சிறந்திருந்ததை அறிந்து கொள்ளலாம்.
* புறநானூற்றுப் பாடல்களின் உயர்ந்த இலக்கியத் தரத்தை உணரலாம்.
நமக்குக் கிடைத்துள்ள முதல் தமிழ்நூல் மிகப்பழந் தமிழ் நூல் தொல்காப்பியமே. தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - சொல்லதிகாரம் - பொருளாதிகாரம் என்று மூன்று பகுதிகளைக் கொண்டு விளங்குகின்றது.
- எழுத்ததிகாரம் - எழுத்திலக்கணம் கூறுகிறது.
- சொல்லதிகாரம் - சொல்லிலக்கணம் கூறுகிறது.
- பொருளதிகாரம் - பொருளிலக்கணம் கூறுகிறது.
அதாவது தமிழர் வாழ்க்கை இலக்கணம் கூறுகிறது. அந்த வாழ்க்கையினை அக வாழ்க்கை என்றும்; புற வாழ்க்கை என்றும் இருகூறாகப் பிரித்து இலக்கணம் கூறுகிறது. அக வாழ்க்கை - காதல் வாழ்க்கையினை அதாவது இல்லற வாழ்க்கையினைக் கூறுவது.
புற வாழ்க்கை - வீரம், கொடை, ஒழுக்கம், கல்வி முதலியவற்றைக் கூறுவது. புறவாழ்க்கையைப் பற்றிக் கூறும் நானூறு செய்யுள்களைக் கொண்டமைந்தது புறநானூறு என்னும் நூலாகும். இந்நூலுள் - வீரம், . கொடை, ஒழுக்கம், கல்வி முதலியவை கூறப்பெற்றுள்ளன. புறநானூறு - ஆசிரியப் பாக்களால் ஆனது. வெளிநாட்டிலிருந்து நம் நாட்டிற்கு கிறித்துவ மதத்தைப் பரப்ப வந்த ஜி.யூ. போப்பு, புறநானூற்றைப் படித்ததன் விளைவு அவரைத் தமிழின்பால் மிகவும் ஈர்த்தது என்று கூறலாம்.
இந்தப் புறநானூற்றுப் பாக்களுக்குப் பல்வேறு அறிஞர் பெருமக்கள் உரை இயற்றி வெளியிட்டுள்ளனர். சங்க இலக்கியங்கள் பலவற்றுக்கு எளிய உரை இயற்றிப் பல்கலை - கல்லூரி - பள்ளி மாணவரைத் தன்பால் ஈர்த்துக் கொண்டவர் புலவர் புலியூர்க் கேசிகனார். இந்தப் புறநானூற்று நூலுக்கும் புலவர் புலியூர்க் கேசிகனாரே உரை இயற்றியுள்ளார்.
அகநானூறு மூலமும் உரையும்! (பகுதி 1 , 2, 3) - புலியூர்க் கேசிகன்