திருமந்திரம் தமிழ் ஆகம நூல். வேதம் பொது நூல் என்றும், ஆகமம் சிறப்பு நூல் என்றும் சைவர் கூறுவர். திருமந்திரத்தில் ஒன்பது உட்பிரிவுகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் தந்திரம் என்பது பெயர். இதில் 232 அதிகாரங்கள் உள்ளன. இப்பொழுது இதில் 3100 செய்யுட்கள் உள்ளன. ‘மூலன் உரை செய்த மூவாயிரம் தமிழ்’ என்பதனால் இதற்கு உரியவை 3000 செய்யுட்களே என்று அறியலாம். எஞ்சியவை பிற்சேர்க்கையாம்.
ஆசிரியர் இதற்கு இட்ட பெயர் திருமந்திர மாலை. தமிழ் மூவாயிரம் என்றும் இதனைக் கூறுவர். தமிழில் தோன்றிய ஒன்பது ஆகமங்களே ஒன்பது தந்திரங்களாக இயற்றப்பட்டன என்பது அறிஞர் கருத்து. இதற்கு வடமொழியில் மூலநூல் இல்லையென்பர்.