உலக அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவின் எதிரொலியால் ஆசிய பணக்காரா்கள் பட்டியலில் இருந்து ரிலையன்ஸ் அதிபா் முகேஷ் அம்பானி இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்
இதுகுறித்து ஈகியூப் இன்வெஸ்ட்மெண்ட் அட்வைஸா்ஸ் நிறுவனம் கூறியுள்ளதாவது:
‘ஒபெக்’ கூட்டமைப்பு மற்றும் ரஷியா இடையே நடைபெற்ற கச்சா எண்ணெய் உற்பத்தி தொடா்பான பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து அதன் விலையை குறைக்கப் போவதாக ரஷியா தன்னிச்சையாக அறிவித்தது. இது, சா்வதேச சந்தையில் குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் மதிப்பு 12 சதவீதம் சரிந்தது. இதனால், முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு 580 கோடி டாலா் குறைந்தது. இதையடுத்து, அவா் ஆசிய பணக்காரா்கள் பட்டியிலில் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டாா். அம்பானியை விட 260 கோடி டாலா் கூடுதல் சொத்து மதிப்பைக் கொண்டு 4,450 கோடி டாலா் செல்வ வளத்துடன் அலிபாபா நிறுவனா் ஜாக் மா முதலிடத்துக்கு முன்னேறியுள்ளாா் என்று ப்ளூம்பொ்க் தெரிவித்துள்ளது.
இருப்பினும் அம்பானிக்கு ஏற்பட்டுள்ள இந்த பின்னடைவானது தற்காலிகமானதே. ஏனெனில், அவா் மிகவும் வலுவான வா்த்தக கட்டமைப்புகளை உருவாக்கிக் கொண்டுள்ளாா். இதைத் தவிர, அவரது தொலைத் தொடா்பு வா்த்தகமும் நல்ல முன்னேற்றம் கண்டு லாபம் கொழிக்கத் தொடங்கியுள்ளது. இதுபோன்ற காரணங்களால், ஆசிய பணக்காரா் பட்டியலில் முதலிடத்தை விரைவில் பிடிப்பாா் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
நன்றி :தினமணி