கொரோனா தொற்று மனிதர்களுக்கு பாதிப்பை கொடுத்தாலும் இயற்கைக்கு நன்மையை செய்து வருகிறது. கொரோனா பாதிப்பால் இந்தியாவில் ஊரடங்கு அமலில் இருப்பதால் தொழிற்சாலைகள் , வாகன போக்குவரத்து என அனைத்தும் முடங்கியுள்ளன. அதன் காரணமாக இந்தியாவில் காற்று மாசுபாடு வெகுவாக குறைந்து இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி கழகமான நாசா தெரிவித்துள்ளது.
கங்கை நதி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தூய்மை அடைந்துள்ளது. சாலைகளில் இருக்கும் மரங்கள் பளிச்சென்று காட்சி அளிக்கின்றன. இவை எல்லாம் இதற்கு முன்பு எங்கிருந்தன என்று கேட்கும் அளவுக்கு, சிறு, சிறு பறவைகள் முதல் பெரிய பறவைகள் வரை சர்வசாதாரணமாக நகரங்களில் உலா வருகின்றன.
இப்படி பல அதிசயங்களுக்கு இடையே காற்றும் பெருமளவில் சுத்தம் அடைந்துள்ளது. அதாவது ஊரடங்கால் அனைத்து வகை வாகனங்களின் இயக்கமும் பெருமளவில் நின்றுள்ளது. மேலும், தொழிற்சாலைகளும் இயங்கவில்லை. இதனால் காற்றில் மாசு கலப்பது பெரிதும் குறைந்துள்ளது. இதை அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் தெளிவாக தெரிகிறது.
கடந்த மார்ச் 31ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதிக்கு இடையில், அமெரிக்க செயற்கைக்கோள்கள் எடுத்த புகைப்படங்களில், வட இந்தியாவில் காணப்படும் காற்றுமாசின் (ஏரோசோல்) அளவு இதுவரை காணப்படாத அளவிற்குக் குறைந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் பதிவு செய்யப்படாத மிகக் குறைந்த அளவு காற்றுமாசு மதிப்பீடு இந்த ஆண்டுதான் பதிவாகியுள்ளது என்று நாசா கூறியுள்ளது. இதன் மூலம் காற்று மாசுவுக்கு முக்கியக் காரணம் மனிதர்கள்தான் என்று தெள்ளத்தெளிவாக தெரியவந்துள்ளது.
பொதுவாக காற்றில் உள்ள ஏரோசல் அளவை வைத்துதான் காற்றின் சுத்த தன்மை கூறப்படுதிறது. தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் புகை, பயிர்களை எரிப்பதால் உண்டாகும் புகை இதுபோன்றவை தான் இந்தியாவில் காற்றில் ஏரோசல் அதிகமாவதற்கு காரணமாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் காற்றில் ஏரோசல் அளவு குறைந்துள்ளது..