இந்நூல் இந்தியத்துணைக் கண்டத்தில், எத்தகைய சிறப்பிடத்தினை இராமேசுவரமும் அதன் திருக்கோயிலும் தீர்த்தங்களும் பெற்றுள்ளன என்பதை இது விளக்குகிறது. இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள இராமேசுவரம், கட்டடக்கலை வளர்ச்சியிலும், சிற்பக்கலை சிறப்பிலும், பூசை மற்றும் திருவிழாக் கொண்டாட்டத்திலும் தனக்கென ஒரு தனியிடத்தைப் பெற்றுள்ள புனிதத்தலம் என்பதனை எடுத்துக்கூறுகிறது.
மேலும் ,இராமேசுவரத்தின் புவியியலமைப்பு, அங்குவாழும் மக்களின் நிலை, இவ்வாய்வுக்குத் துணைபுரிந்த சான்றுகள் பற்றிக் கூறுகிறது. முதல் இயல் இந்துசமயப் பிரபஞ்சத்தில் இராமேசுவரம் பெற்றிருக்கும் சிறப்பிடத்தினை இயம்புகிறது. . மேலும் இத்திருத்தலம் நீத்தார்கடன் செய்வோர்க்கு எவ்வாறு ஏற்றதாய் உள்ளது என்பதை விரிவாக ஆய்வு செய்கிறது.
இரண்டாவது இயல் இராமேசுவரம், இராமநாதசுவாமி கோயிலின் வரலாற்றுப் பின்னணியையும், காலந்தோறும் மன்னரும் மற்றவரும் அளித்த கொடைகள் பற்றியும் விவரிக்கிறது. கோயில் வளாகத்தில் உள்ள சன்னதிகள், மண்டபங்கள், தீர்த்தங்கள் ஆகியவற்றின் அமைவிடங்கள் பற்றி மூன்றாவது இயல் விளக்குகிறது.
நான்காவது மற்றும் ஐந்தாவது இயல்கள் முறையே இராமேசுவரம் கோயிலின் கட்டடக்கலை, சிற்பக்கலை குறித்தவையாகும். இவை ஒப்புநோக்கில் ஆராயப்பட்டுள்ளன. காலவாரியாக இல்லாமல் கலைச்சிறப்பின் அடிப்படையில் வரிசைப்படுத்திக் கூறப்பட்டுள்ளன.