உலகம் என்பது ஒரு ஆடுகளம். அதிலுள்ள மக்கள் அனைவரும் ஆட்டக்காரர்களே. ஆண்கள் - பெண்கள் ஆகிய எல்லோருமே, வாழ்க்கை எனும் ஆட்டத்தைத்தான் மிகவும் வேடிக்கையாக ஆடிக் கொண்டிருக்கிறார்கள். இயற்கையளித்துள்ள விதிகளின்படி, காலம் எனும் பந்தை விளையாடி, இன்பம் எனும் இலக்கை நோக்கியே, சதாகாலமும் ஆடுகிறார்கள்; பாடுபடுகிறார்கள்.ஆடுகளப் பந்தாட்டத்தில், விதியோடு ஆடிச் செல்பவர்கள், மகிழ்ச்சி அடைகின்றார்கள். பலம் பெறுகின்றார்கள். நலம் அடைகின்றார்கள். அளப்பரிய சந்தோஷங்களைப் பெற்று ஆரோக்கியமாக வாழ்கின்றார்கள்.
அதுபோலவே, வாழ்க்கை என்ற ஆட்டத்தில், விதிகளையே மாற்றி, விவரமாக ஏமாற்றி, வன்முறையை ஏற்றி, வக்ர புத்தியோடு வாழ்கின்ற பலர் அதற்கு பிரதி பலனாக, தீராத நோய்களையும், மாறாத துன்பங்களையும், ஆறாத அலங்கோலங்களையும் அனுபவித்து, அலறித் துடித்தே ஓய்கிறார்கள்; மாய்கிறார்கள்.
ஆகவே, விதிகளுக்கடங்கிய விவேகமுள்ள வாழ்க்கையானது, ஒழுக்கமான நிகழ்ச்சிகளின் பிரதிபலிப்பாக விளையாட்டுக் களாகவும்; விளையாட்டு நிகழ்ச்சிகளின் மறு பதிப்பே வாழ்க்கை யாகவும் வெளிப்படுத்திக் கொண்டு மக்களிடையே மக்களுடன் வீரியமாக வாழ்கின்றன; வாழ்விக்கின்றன.
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற உயிர்க் கொள்கைகளை, மனித உள்ளங்களில் விதைத்து, வளர்த்து, விளைவிக்கும் நிலங்களாக, விளையாட்டுக் களங்கள் விளங்குகின்றன.
ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாய அமைப்புக்கு முதலிடம்; மாற்றார் கருத்துக்கும் மதிப்பளித்து ஏற்கின்ற மனப்பக்குவம்; தானென்ற அகங்காரத்தை, வீணான கர்வத்தை, வில்லங்கமாக நினைக்கும் வக்ரத்தை, பழிவாங்கும் பைசாச குணத்தையெல்லாம் போக்கிப்புறம் தள்ளுகிற பண்பார்ந்த மனம் படைக்கின்ற பாசநிலமே ஆடுகளங்களாக விளங்குகின்றன.
இப்படி வந்தோர்க்கெல்லாம் வளங்களை வாரி வழங்குகிற விளையாட்டுக்கள் எல்லாம், நீராக நிறைந்த ஆறாக ஓடும் ஆற்றல் மிக்கவை. ஆற்றுக்குக் கரைபோல, ஆற்றலை ஒழுங்குபடுத்துகின்ற ஆற்றல் விதிகளுக்கு மட்டுமே உண்டு.
எல்லாதர மக்களும், விரும்புகிற இலக்கணங்களைக் கொண்ட விளையாட்டுக்களெல்லாம், நாடு, இனம், மொழி, நிறம் கடந்து உலகமெல்லாம் உலா வந்து கொண்டிருக்கின்றன. பிரிவுகளும் உறவுகளும் கொண்ட உலகையெல்லாம் ஒரு குடையின் கீழ் கோலோச்சி வருகிற விளையாட்டுக்களை எல்லாம் உலக மக்கள் எல்லோரும் ஒன்றுபோல் ஆடினால்தானே, உலகம் இணையும், உள்ளங்கள் மகிழும். விளையாட்டுப்பண்பாடுகளும் வளரும்...