நம்மை வழிநடத்துவோரை தலைவர்கள் என்கிறோம். நாட்டை வழிநடத்துவோரை அரசியல் தலைவர்கள் என்கிறோம், உலக அரசியலை அலசிப் பார்த்தால் பல தலைவர்கள் தங்கள் நாட்டை வழிநடத்துவதற்குப் பதிலாக சொந்த வீட்டை மட்டும் வழிநடத்திக் கொண்ட அவலம் தெரிய வரும் சுயநலத்துக்காகவும் புகழுக்காகவும் அரசியலை அசிங்கப்படுத்தும் அது போன்ற தலைவர்களுக்கு மத்தியில் அத்திப் பூத்தாற்போல்தான் ஒருசில பெரும் தலைவர்கள் தோன்றுகின்றனர். பொதுநலத்தை உயிராகப் போற்றி தங்கள் பணியை செவ்வெனச் செய்கின்றனர்.
'கல்வியே தேசத்தின் கண்களைத் திறக்கும்' என்று கூறி பட்டித் தொட்டிகளெல்லாம் பள்ளிக்கூடங்களைக் கட்டியவர் ஏழைப் பிள்ளைகளும் பள்ளிக்கு வரவேண்டும் என்பதால் புரட்சிக்கரமான மதிய உணவுத் திட்டத்தை அறிமுகம் செய்தவர். தாம் முதலமைச்சராக இருந்தபோதும் வறுமையில் வாடிய தன் தாய்க்கு சிறப்புச் சலுகைகள் எதையும் தராதவர், சினிமாவில்தான் இதுபோன்ற கதாப்பாத்திரங்களைப் பார்க்க முடியும் என்று சொல்லுமளவுக்கு தமிழகத்தில் நம்ப முடியாத நல்லாட்சியைத் தந்து இறவாப் புகழ்பெற்ற அந்த உன்னத தலைவர் கர்ம வீரர் காமராஜர்.
இவரைப் போன்றத் தலைவர்கள் தமிழகத்தில் தொடர்ந்திருந்தால் நமது மாநிலம் தரணிப் போற்றும் அளவுக்கு உயர்ந்திருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. 1903 ஆம் ஆண்டு ஜீலை 15-ஆம் நாள் தமிழ்நாட்டின் விருதுநகரில் குமாரசாமி நாடார் சிவகாமி அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார் காமராஜர், குடும்ப ஏழ்மையின் காரணமாகவும், படிப்பு ஏறாத காரணத்தினாலும் அவரால் ஆறு ஆண்டுகள்தான் கல்வி கற்க முடிந்தது.
12-ஆவது வயதில் தனது தாய்மாமனின் துணிக்கடையில் வேலைப் பார்த்தார். அப்போது இந்தியா முழுவதும் சுதந்திரத் தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. அவருக்கு 15 வயதான போது ஜாலியன் வாலாபாக் படுகொலைப் பற்றிய செய்தி அவரின் காதுக்கு எட்டியது. அதே நேரம் காந்தி விடுத்த ஒத்துழையாமை இயக்க அழைப்பை ஏற்று தனது 16-ஆவது வயதில் அவர் காங்கிரஸ் கட்சியில் முழுநேர உறுப்பினராக சேர்ந்தார். அன்றிலிருந்து பல ஆண்டுகள் சவுகர்யம், பதவி, வசதி என்று பாராமல் கட்சிக்காக கடுமையாக உழைத்தார்.
முதலமைச்சர் பதவி
1930-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வேதாரண்யத்தில் நடந்த காந்தி அடிகளின் உப்பு சத்தியாக்கிரகதில் கலந்து கொண்டார். அதனால் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது அந்த முதல் சிறை தண்டனைக்குப் பிறகு அவர் மேலும் 5 முறை சிறைவாசம் அனுபவித்திக்கிறார். கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் அவர் சிறையிலேயே கழித்திருக்கிறார். 1940 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த பொறுப்பை அடுத்த 14 ஆண்டுகளுக்கு வகித்தார். 1952-ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த 2 ஆண்டுகளில் சென்னை மாநிலத்தின் முதலமைச்சரானார்.
மிகவும் தயக்கத்தோடுதான் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. இந்தியாவில் ஆங்கிலம் தெரியாத ஒருவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரானது அதுவே முதன்முறை. ஆனால் ஆங்கிலம் தெரியாமலும் 6 ஆண்டுகளே கற்ற கல்வியுடனும் முதலமைச்சர் பொறுப்பை ஏற்ற அவர்தான் அடுத்த 9 ஆண்டுகளுக்கு தலை சிறந்த தலமைத்துவத்தை தமிழகத்திற்கு வழங்கினார். அவரது கால கட்டத்தில் இந்தியாவிலேயே மிகச்சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்ட மாநிலம் என்ற பெருமையை பெற்றது தமிழ்நாடு
அப்படி அவர் என்ன செய்தார்?
அரசியலில் தன்னை எதிர்த்தவர்களையே ஒருவர் அரவனைத்த கதையை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? காமராஜர் முதலமைச்சரான உடனேயே அதே பதவிக்கு தன்னை எதிர்த்து போட்டியிட்ட சி.சுப்பிரமணியம், எம்.பக்தவத்ஜலம் ஆகிய இருவரையும் தன் அமைச்சரைவையில் சேர்த்துக்கொண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அவர் தனது அமைச்சர்களுக்கு சொன்ன அறிவுரை என்ன தெரியுமா? “பிரச்சினையை எதிர்கொள்ளுங்கள் அவை எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை அதனை தீர்ப்பதற்கான வழிகளைத் தேடுங்கள் நீங்கள் ஏதாவது செய்தால் மக்கள் நிச்சயம் திருப்தி அடைவார்கள்” என்பதுதான்.
கல்விக்கு அளித்த முக்கியத்துவம்
அவர் நல்லாட்சியில் கல்வித்துறையிலும் தொழிற்துறையிலும் தமிழ்நாடு துரிதமான வளர்ச்சி கண்டது. மாநிலம் முழுவதும் பல புதிய பள்ளிகளை கட்ட உத்தரவிட்டார். பழைய பள்ளிகள் சீர் செய்யப்பட்டு ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு தொடக்கப்பள்ளி, ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் ஒரு உயர்நிலைப் பள்ளி இருப்பதை உறுதி செய்தார். எழுத்தறிவின்மையை போக்க வேண்டும் என்பதற்காக பதினோராம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வியை அறிமுகப்படுத்தினார். ஏழை சிறுவர்களின் வயிறு காயாமல் இருக்க மதிய உணவு வழங்கும் உன்னதமான திட்டத்தை அறிமுகம் செய்தார்.
ஜாதி வகுப்பு, ஏழை பணக்காரன் என்ற பேதத்தை ஒழிக்க விரும்பிய அவர் எல்லாப் பள்ளிப் பிள்ளைகளுக்கும் இலவச சீருடையை வழங்கினார். அவர் ஆட்சியில் தமிழ்மொழிக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது. பள்ளிகளிலும் உயர்கல்வி நிலையங்களிலும் தமிழைப் போதன மொழியாக்கியதோடு அறிவியல் தொழில்நுட்பப் பாடப் புத்தகங்களும் தமிழில் வெளிவரச் செய்தார். அரசாங்க அலுவலகங்களுக்கு தமிழ் தட்டச்சு இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. நீதிமன்றங்களிலும் வழக்குகளை தமிழில் நடத்த ஊக்குவிக்கப்பட்டது.
வேளாண்மையும் தொழிற்துறையும்
காமராஜரின் ஆட்சியில் விவசாயம் நல்ல வளர்ச்சி கண்டது. வைகை அணை, மணிமுத்தாறு அணை, கீழ்பவானி அணை, பரமிக்குளம் சாத்தனூர் அணை என்று பல அணைக்கட்டு திட்டங்கள் அசுர வேகத்தில் நிறைவேற்றப்பட்டன. தொழிற்துறையிலும் முத்திரை பதித்தார் காமராஜர். நெய்வேலி பழுப்பு நிலக்கரி சென்னை ஆவடி ராணுவ தளவாடத் தொழிற்சாலை சென்னை ஹிந்துஸ்தான் டெலி பிரிண்டர்ஸ் என பல பெரியத் தொழிற்சாலைகள் தமிழகத்தில் உருவாயின. அவரது மாட்சிமை பொருந்திய ஆட்சியைக் கண்டு இந்திய பிரதமர் நேரு இந்தியாவிலேயே மிகச்சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும் மாநிலம் தமிழ்நாடு என்று பாராட்டினார்.
இப்படிப்பட்ட சிறந்த நல்லாட்சியை வழங்கியதால்தான் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவ்வளவும் செய்த அவர் அடுத்து செய்த காரியம் அரசியலுக்கே ஒரு புதிய இலக்கணத்தை கற்றுத் தந்தது. காங்கிரஸ் கட்சி அதன் துடிப்பையும் வலிமையும் இழந்து வருவதாக உணர்ந்த காமராஜர் எல்லா மூத்த காங்கிரஸ் தலைவர்களும் தங்கள் அரசியல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டு நலனுக்காக கட்சிப்பணிகளில் ஈடுபட வேண்டும் என்ற ஒரு திட்டத்தை உருவாக்கி பிரதமர் நேருவிடம் பரிந்துரை செய்தார்.
காமராஜர் திட்டம்
இரண்டே மாதங்களில் அந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டது காங்கிரஸ் பணிக்குழு. அந்தத் திட்டத்திற்கு 'காமராஜர் திட்டம்' என்றே பெயரிடப்பட்டது. தனது திட்டத்திற்கு முன் உதாரணமாக இருக்க 1963-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ந்தேதி தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் அந்த அதிசய தலைவர். அவரைத் தொடர்ந்து லால் பகதூர் சாஸ்திரி, ஜக்ஜிவன்ராம் முராஜிதேசாய், எஸ்கே.பட்டேல் போன்ற மூத்தத் தலைவர்களும் பதவி விலகினர். அதே ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை தந்தார் ஜவகர்லால் நேரு, அதற்கு அடுத்த ஆண்டே நேரு இறந்ததைத் தொடர்ந்து இந்தியாவின் அடுத்த பிரதமராக லால் பகதூர் சாஸ்திரியை முன் மொழிந்தார் காமராஜர்.
இரண்டே ஆண்டுகளில் சாஸ்திரியும் மரணத்தைத் தழுவ அப்போது 48 வயது நிரம்பியிருந்த நேருவின் மகள் இந்திராகாந்தியை இந்தியாவின் அடுத்த பிரதமராக்கினார் காமராஜர். அந்த இரண்டு தலமைத்துவ மாற்றங்களையும் அவர் மிக லாவகமாக செய்து முடித்ததால் காமராஜரை 'கிங்மேக்கர்' என்று அழைத்தனர் பத்திரிக்கையாளர்களும் மற்ற அரசியல்வாதிகளும். தமிழ்நாட்டில் மெச்சதக்க பொற்கால ஆட்சியை தந்த காமராஜர் தனது கடைசி மூச்சு வரை சமூகத்தொண்டு செய்வதிலேயே குறியாக இருந்தார். 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் நாள் தனது 72-ஆவது அகவையில் காலமானார்.
எளிமையான வாழ்வு
அதற்கு அடுத்த ஆண்டு அவருக்கு உயரிய “பாரத ரத்னா” விருது வழங்கி கெளரவித்தது இந்திய அரசு. சமூகத் தொண்டையே பெரிதாக நினைத்ததால் தனக்கென்று ஒரு குடும்பத்தை அமைத்துக் கொள்ளவில்லை காமராஜர். ஆம் அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை மேலும் சிறு வயதிலேயே கல்வியை கைவிட்டதை நினைத்து வருந்திய அவர் தான் சிறைவாசம் சென்ற போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கில நூல்களை வாசிக்க கற்றுக்கொண்டார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த போதும் அவருடைய தாய் விருதுநகரில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒரு வீட்டில்தான் வாழ்ந்தார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா!
தன் குடும்பம் என்பதற்காக தன் தாய்க்குக்கூட எந்த சலுகையும் வழங்கியதில்லை. அவர் தனக்கென வைத்திருந்த சொத்துக்கள் என்ன தெரியுமா? சில கதர் வேட்டி சட்டைகளும், சில புத்தகங்களும்தான். பதவிக்குரிய பந்தா எப்போதும் அவரிடம் இருந்ததே இல்லை எந்த நேரத்திலும் எவரும் அவரை தடையின்றி சந்திக்க முடியும். அதனால்தான் அவரை கர்ம வீரர் என்றும், கருப்பு காந்தி என்றும் இன்றும் போற்றுகிறது தமிழக வரலாறு. அப்படிப்பட்ட ஒரு கன்னியமான நேர்மையான இன்னொரு தலைவனை தமிழக வரலாறு மட்டுமல்ல உலக வரலாறும் இனி சந்திக்குமா என்பது சந்தேகமே?
முறையான கல்விகூட இல்லாத ஒருவர் நாட்டின் நலனை மட்டுமே குறிக்கோளாக கொண்ட ஒருவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகி இவ்வுளவும் செய்திருக்கிறார் என்றால் “துணிந்தவனால் எதையும் செய்ய முடியும் என்றுதானே பொருள்” நல்லாட்சி என்ற வானம் வசப்பட்டதற்கு அவருடைய சமதர்ம சிந்தனையும், நாடும் மக்களும் நலம்பெற வேண்டும் என்ற வேட்கையும், சுயநலமின்றி சமூக நலத்தொண்டு செய்ய வேண்டுமென்ற நல் எண்ணமும்தான் காரணம். அதே காரணங்கள் நமக்கும் வானத்தை வசப்படுத்த உதவும். வாழ்க்கையில் நம்பிக்கையோடும் விடாமுற்சியோடும் போராடினால் நமக்கும் நாம் விரும்பும் வானம் வசப்படாமலா போகும்!