தமிழ் மண் பறித்தெடுக்கப்பட்ட வரலாற்றை நினைவுபடுத்துவதின் மூலமே இழந்த மண்ணை மீட்க வேண்டும் என்ற உறுதியும், இருக்கும் மண்னை காப்பாற்ற வேண்டும் என்ற உத்வேகமும் தமிழர்களுக்கு ஏற்படும். இழந்த மண்ணை இனிமேல் எப்படி திருப்பிப் பெறுவது என சிலர் கேட்கின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் சேர்க்கப்பட்டுள்ள மராட்டிய மண்ணான பெல்காம் மாவட்டத்தை மீண்டும் மராட்டியத்துடன் சேர்க்க வேண்டும் என்ற கிளர்ச்சி இன்னமும் தொடர்ந்து நடைபெறுகிறது. பெல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த மராட்டியர்கள் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்று சேர்ந்து மராட்டிய சமிதி' ஒன்றை ஏற்படுத்தி, அந்த மாவட்டத்திலுள்ள சட்டமன்ற தொகுதிகளை யும், நாடாளுமன்ற தொகுதியையும் கைப்பற்றிக் கொண்டு தொடர்ந்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார் கள், ஆனால் ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகியவற்றில் வாழ நேர்ந்துள்ள தமிழர்கள் மொழி அடிப்படையில் ஒன்றுபட்டு தங்களுக்கு என்று தனி அமைப்பினை ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை. தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் மோதல்கள் அங்கும் பரவி அங்குள்ள தமிழர்களைப் பிளவுபடுத்தி வருகின்றன.
எதை இழந்தாலும் ஓர் இளம் தனது சொந்த மண்ணை இழக்கக் கூடாது என்பதற்கு பாலஸ்தீனிய அராபியர்கள் பறிகொடுத்த மண் சரித்திரச் சான்றாக விளங்குகிறது. அவர்களுக்கு ஏற்பட்ட கதி நமக்கும் வந்துவிடக் கூடாது என்பதை உணர்த்தவே "தமிழன் மண்ணை இழந்த வரலாறு" இந்நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளது.
கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னால் நமது தாயக மண் எப்படியெல்லாம் பறிக்கப்பட்டது என்பதை இன்றைய இளைய தலைமுறையைச் சேர்ந்த தமிழர்கள் உணர்வதற்கு இந்நூல் பெரிதும் உதவுமென்று நம்புகிறேன். ஏனெனில் இழந்த மண்ணை மீட்பதற்கும் இருக்கும் மண்ணைக் காப்பதற்கும் இளைய சமுதாயத்தினால் மட்டுமே முடியும்.