திருவாசகம் சில சிந்தனைகள்
திருச்சதகம் தொடங்கி, அச்சோப் பதிகம் முடிய உள்ள பகுதிகளில் நான்கு, ஆறு, எட்டு அடிகள் கொண்ட பாடல்கள் இடம் பெற்றுள்ளன. திருச்சதகப் பாடல்கள் நூறும் பத்துப் பத்தாகப் பகுக்கப்பெற்றுள்ளன. இவற்றில் முதல் பத்துப் பாடல்கள் கட்டளைக் கலித்துறையால் அமைந்தவை.
அடிகளாருக்கு ஐந்து நூற்றாண்டுகள் முற்பட்டவராகிய காரைக்கால் அம்மையாரே, தம் 'இரட்டை மணிமாலையில் கட்டளைக் கலித்துறையைப் பயன்படுத்தி உள்ளார். இன்று கிடைக்கின்ற நூல்கள் அளவில் கட்டளைக் கலித்துறையை முதன்முதலாகக் காண்பது அம்மையாரின் பாடல்களிலேயே ஆகும்.