கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் வேலையின்மை விகிதம் வரலாறு காணாத அளவில் அதிகரித்து வந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் கடைசி வாரத்தில் அறிவிக்கப்பட்ட நாடு தழுவிய முடக்க நிலையால் இந்தியாவின் வேலையின்மை விகிதம் திடீரென சீறிப் பாய்ந்துள்ளது.
சென்டர் ஃபார் மானிடரிங் இந்தியன் எக்கானமி (சி.எம்.ஐ.இ) என்ற அமைப்பு எடுத்த கணக்கெடுப்பின்படி, இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் 7.78 சதவீதமாக இருந்த வேலையின்மை சதவீதம், ஏப்ரல் மாதம் 23.52 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது புரிந்துகொள்ளக்கூடியதே.
ஏனெனில் ஏப்ரல் மாதம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக முடக்க நிலை தீவிரமாக அமலில் இருந்தது. இதனால் ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.
ஆனால், மாநிலவாரி புள்ளிவிவரப்படி இந்திய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலேயே இந்த வேலையின்மை மிக அதிகமாக இருப்பது புதுச்சேரியில், அதற்கு அடுத்த இடத்தில் இருப்பது தமிழ்நாடு என்ற தகவல்தான் அதிர்ச்சிகரமாக உள்ளது.
சி.எம்.ஐ.இ புள்ளிவிவரப்படி ஏப்ரல் மாதம் புதுவையின் வேலையின்மை சதவீதம் 75.8. தமிழ்நாட்டின் வேலையின்மை விகிதம் 49.8. தேசிய சராசரியான 23.52 சதவீதத்தைவிட இது மிகவும் அதிகம்.
இதே மாதத்தில் டெல்லியின் வேலையின்மை விகிதம் 16.7 சதவீதம். மகாராஷ்டிரத்தில் 20.9 சதவீதம். ஆந்திராவில் 20.5 சதவீதம், கர்நாடகத்தில் 29.8, கேரளாவில் 17, தெலங்கானாவில் 6.2, பிகாரில் 46.6.