தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், இந்த தேர்வு குறித்த முக்கிய தகவல்களை இப்போது பார்ப்போம்.
TNPSC பொதுத் தமிழ் Complete Guide
குரூப் 4(Group 4) தேர்வு என்றால் என்ன?
தமிழக அரசு துறைகளில் 4 ஆம் நிலை பதவிகளை நிரப்ப TNPSC ஆல் நடத்தப்படும் தேர்வே குரூப் 4 தேர்வு. இதில் சில ஆண்டுகளுக்கு முன் விஏஓ பதவிகளுக்கான தேர்வும் சேர்த்தே நடத்தப்படுகிறது.
குரூப் 4(Group 4) தேர்வு ஏன் முக்கியம்?
தமிழக இளைஞர்கள் பெரும்பாலானோரின் கனவு அரசு வேலை. அந்த கனவை எளிதாக நனவாக்கும் சிறந்த வழி தான் குரூப் 4 தேர்வு. என்னதான் தனியார் துறைகளில் சம்பளம் அதிகமாக கிடைத்தாலும் பணி பாதுகாப்பு, அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் மரியாதை போன்றவை அரசு வேலைக்காக இளைஞர்களை ஏங்கச் செய்கிறது. அதுவும் குரூப் 4 தேர்வை பொறுத்தவரையில், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அனைவருமே இந்த தேர்வை எழுத தகுதி பெற்றவர்கள் தான். மேலும் ஒரே ஒரு எழுத்துத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றுவிட்டால் உடனடி வேலை. மேலும் குருப் 4 தேர்வுகளில் உள்ள இன்னொரு முக்கிய அம்சம் என்னவென்றால் உங்கள் சொந்த மாவட்டத்திற்குள்ளாகவே வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு.
இந்த நிலையில் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான அறிவிப்பு, அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால், தேர்வு ஜனவரியில் நடத்தப்படலாம் என தெரிகிறது. மேலும் தேர்வு முடிவுகள் மார்ச் மாதத்தில் வெளியிடப்படலாம என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சுராவின் 437 பக்கங்கள் கொண்ட குரூப் 4 கையேடு
பதவிகள்
TNPSC குரூப் 4 தேர்வானது, தற்போது 7 விதமான பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. அவை, இளநிலை உதவியாளர் (Junior Assistant), தட்டச்சர் (Typist), சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist), கிராம நிர்வாக அலுவலர் (Village Administative Officer), வரித் தண்டலர் (Bill Collector), நில அளவர் (Field Surveyor), வரைவாளர் (Draftsman)
கல்வித் தகுதி
குரூப் 4 தேர்வுகளுக்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி என்பது தான் அடிப்படை கல்வித் தகுதி. இருப்பினும் தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கு தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
குரூப் 4 தேர்வுக்கான வயதுத் தகுதி பொதுவாக 18 முதல் 30 வரை ஆகும். இருப்பினும் சில பதவிகளுக்கு வயது வரம்பு தகுதியில் மாற்றம் உண்டு.
தேர்வு முறை
குரூப் 4 தேர்வானது ஒரேயொரு எழுத்து தேர்வை அடிப்படையாகக் கொண்டது. எழுத்துத் தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். குரூப் 4 தேர்வின் வினாத்தாளில் இரண்டு பகுதிகளாக வினாக்கள் கேட்கப்படும். அனைத்து வினாக்களும் கொள்குறி வகையில் (Objective Type) கேட்கப்படும்.
பாடத்திட்டம்(Syllabus)
முதல் பகுதியான மொழிப்பாடப்பிரிவில் இதுவரை, தமிழ் அல்லது ஆங்கில மொழிப் பாடங்களில் 100 வினாக்கள் இடம்பெறும். தேர்வர்கள் ஏதேனும் ஒரு மொழிப்பிரிவை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆனால் தற்போது தமிழக அரசு, தமிழ் பாட தாளில் குறைந்தபட்சம் 45 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றால் மட்டுமே, பிற தாள்களை மதிப்பீடு செய்யும் வகையில் தேர்வு நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த பாடத்திட்ட முறையில் மாற்றம் வந்தாலும் வரலாம்.
அடுத்ததாக, 100 வினாக்கள் பொது அறிவு பகுதியிலிருந்து கேட்கப்படும். அவற்றில் 75- பொது அறிவு வினாக்களும் , 25- திறனறி தேர்வு (Aptitude Test) வினாக்களும் இருக்கும். இந்த பொது அறிவு பகுதியில் அறிவியல், நடப்பு நிகழ்வுகள், புவியியல், வரலாறு, இந்திய அரசியல், பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம், திறனறி வினாக்கள் போன்ற பகுதிகளிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்.
எழுத்துத் தேர்வில் தகுதி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவர். அதிலும் தகுதி பெறுபவர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியிடங்கள் வழங்கப்படும்.
குரூப் 4 தேர்வுக்கு என்ன படிப்பது?
குரூப் 4 தேர்வுக்கான பாடத்திட்டம் TNPSC ஆல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பாடத்திட்டத்தின் படி நீங்கள் தயாராக வேண்டும். குரூப் 4 தேர்வில் பெரும்பாலும் வினாக்கள் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி பாடப் புத்தகங்களில் இருந்தே கேட்கப்படுகின்றன. சில நேரங்களில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடங்களில் இருந்தும் வினாக்கள் வந்துள்ளன. எனவே 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான தமிழ், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களை நன்றாக படித்தாலே நல்ல மதிப்பெண்கள் பெறலாம். ஆனால் இந்த புத்தகங்களைப் படிக்கும் போது TNPSC ஆல் வெளியிடப்பட்ட பாடத்திட்டத்தை ஒப்பிட்டு பார்த்து, தேவையான பகுதிகளை மட்டும் படித்துக் கொள்ளுங்கள்.
கூடுதலாக, விரைவில் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுவதால், வேலை வேண்டும் என உறுதியுடன் இருப்பவர்கள் குறைந்தது ஆறு மாதம் அல்லது ஒரு வருட நடப்பு நிகழ்வுகளை படித்து வைத்துக் கொள்வது நல்லது. குரூப் 4 தேர்வுக்கு தயாராகுபவர்களில் பெரும்பாலானோர்க்கு கடினமாக இருக்கும் பகுதி கணிதம் தான். எனவே தினமும் கணித பகுதியில் இருந்து ஒரு தலைப்பை பயிற்சி செய்து கொள்வது நல்லது.
தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்ட TNPSC GROUP 4 கையேடு
TNPSC ஆல் வெளியிடப்படும் தேர்வு அறிவிப்புகளில் அதிக காலியிடங்களை கொண்டுள்ள தேர்வு குரூப் 4 தேர்வு தான். அதே நேரம் அதிகமானோர் பங்கேற்கும் தேர்வும் இது தான்.
கடந்த 2 ஆண்டுகளாக குரூப் 4 தேர்வு நடக்காததால், ஏற்கனவே தேர்வு தயாரானவர்களோட, தற்போது தேர்ச்சி பெற்றவர்களும் போட்டியிடுவர். எனவே தேர்வு மிக போட்டி மிகுந்ததாக இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக இந்த தேர்வை எதிர்நோக்கி ஆயிரக்கணக்கானோர் தயாராகி வருவதால், இன்னும் தேர்வுக்கு தயாராதவர்கள் உடனடியாக தயாராகி கொள்ளுங்கள்.